சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Wednesday, November 25, 2015

போதை தெளிவது எப்போது?


திருச்செங்கோட்டில்  மது அருந்தி விட்டு தேர்வறையில் மயங்கி விழுந்த 7  மாணவிகள் பள்ளியை விட்டு நீக்கம் - செய்தி 
         இந்த செய்தி நமக்கு எந்த அதிர்ச்சியையோ கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. இல்லை இது அதிர்ச்சியான சம்பவம் தான் கோபபட வேண்டிய விஷயம் தான் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தற்கால உலகத்தில் இல்லை என்று அர்த்தம். நீங்கள் அந்த காலத்து ஆள்  (நீங்க இன்னும் வளரனும் தம்பி)
     செய்திகளில் நீங்கள் படித்திருக்கலாம். “வெளிநாட்டில் பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சக மாணவனை சுட்டான்” அவர்களுக்கு துப்பாக்கி சகஜமாக கிடைக்கிறது. நமக்கு மது சாதாரணமாக கிடைக்கிறது.
    இது போன்ற சம்பவங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இவை நாம் எதிர்பார்த்ததுதான்.
          எங்களின் பள்ளி பிராயத்தில்.........

எங்களின் ஊரிலும் சாராயம் விற்பதை பார்த்திருக்கிறேன். ஏதேனும் கற் குவியலின் பொந்துக்குள் அல்லது மண் பூச்சுக்கள் கரைந்து செங்கற்கள் முழுதும் வெளியே நீட்டி கொண்டிருக்கும் சிதிலமடைந்த சுவற்றின் பொந்துக்குள் வைத்து விற்பார்கள். பாட்டில் இருக்கும் இடம் வெளியே இருந்து பார்த்தால் யாருக்கும் தெரியாது. நாங்கள் விளையாடுமிடமும் அதுதான். அனால் நாங்கள் யாராவது அதனை வேடிக்கை பார்த்தாலோ பக்கத்தில் சென்றாலோ அடிக்க வருவார்கள். இன்றோ?
     இன்றைய தலைமுறை பிள்ளைகள் அதை ருசி பார்த்துகொண்டிருக்கிறார்கள். விற்கும் இடமும் பள்ளி அருகிலேயே.
                  இந்த திருச்செங்கோடு பள்ளி சம்பவத்தில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.
   -பிறந்த நாள் பார்டிக்கு “குவார்ட்டர்” என்ற பழக்கம் யாரிடமிருந்து இளைய தலைமுறைக்கு படர்ந்தது?
   -மாணவிகளுக்கு மது பாட்டில் வாங்கி கொடுத்தது யார் ?
   -பள்ளியில் மது குடிக்கலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்பட யார் காரணம்?
   -பள்ளி வளகதிற்குள் மதுவை கொண்டு வரும் தைரியத்தை அவர்களுக்கு உண்டாகியது எது?
   - மாணவர்களை அடிக்க கூடாது, மனம் வேதனை படும்படி பேச கூடாது, என்று கல்வி உரிமை சட்டம் வகுத்த பெரியோர்களே! இந்த மாணவிகளை உங்களின் கல்வி உரிமை சட்டத்தின் படி என்ன செய்வதாய் உத்தேசம்?
   நோட்டு கொண்டு வராததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை. ஆசிரியர் கைது.
வகுப்பறையை விட்டு  வெளியே அனுப்பியதால் மாணவன் தற்கொலை. ஆசிரியர் கைது.
   வீட்டுபாடம் செய்யாததால் ஆசிரியர் கண்டித்தார். மன  வேதனை அடைந்த மாணவி தற்கொலை ஆசிரியர் கைது.
இது போன்ற செய்திகளை நீங்கள் படிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களின் இறுதி பிடிமானம் “நமக்கேன் வம்பு”  
நோட்டு கொண்டு  வரலை சார் – சரிப்பா உட்கார்
வீட்டு  பாடம் செய்யலை சார் அப்டியாப்பா உட்கார்
இன்னக்கு பரிச்சன்னு தெரியாது சார் – பரவாயில்லப்பா உட்கார்
இம்மாதிரியான அணுகுமுறை எந்த மாதிரியான மாணவனை, சமூகத்தை உருவாக்கும்? யூகிக்கவே பயமாக இருக்கிறது.ஆனால் ஆசிரியர்கள் தங்களின் வேலையை, வாழ்வாதாரத்தை  தக்க வைத்து கொள்ள வேறு வழியில்லை. இன்றைய ஆசிர்யர்கள் மாணவர்களுக்கு பயந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
      இதே நிலை நீடித்தால் கல்லூரி மேல்நிலை கல்விகளில் நிகழும் இம்மாதிரியான நிகழ்வுகள் ஆரம்ப பள்ளிகளிலும் நடக்கலாம்.   பாலியல் வல்லுறவுகள் மாணவ சமுதாயதிற்குள்ளும் நடக்கலாம்.மாணவர் மைய கல்வி முறை என்ற நிலை பிறழ்ந்து மாணவர் கட்டுப்பாட்டில் கல்வி என்ற நிலை வரலாம். (கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் எதையும் செய்ய தூண்டும்)
    இந்த 7 மனைவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் T.C கொடுத்தது தவறு என்கிறார் மாவட்ட ஆட்சியர். நமது நிலைப்பாடும் அதுவே.
பள்ளிகளில் T.C கொடுப்பது என்பது இன்று சாதாரண நிகழ்வாகி விட்டது. அரசு இடை நின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கோடி கோடியாய் கொட்டிக் கொடிருக்கிறது. ஆனால் தலைமை ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை தேர்ச்சி சதம் போன்ற காரணங்களை காட்டி மிக சாதாரணமாக T.C  கொடுத்து விடுகிறார்கள். அப்படி பார்த்தால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணி  நீக்கம் செய்வது தானே நியாயம்.
   தண்டனை என்பது குற்றத்தை திருத்தி கொள்வதற்கான வாய்பாக அமைய வேண்டும்.  T.C  கொடுத்த பின்பு அந்த மாணவர்களின் நிலை என்னாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் வாழ்க்கையே திசை மாறி விடும்.
எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும்  T.C கொடுப்பது என்பது ஏற்புடையது அல்ல.
கொலை குற்றவாளிகளுக்கே சிறையில் கல்வி கற்க உரிமை உள்ள போது மாணவர்கள் என்ன கொலை குற்றவாளிகளை விட தண்டிக்கப் பட வேண்டியவர்களா?
மதுவினால் குடும்பங்கள் அழிகின்றன வாழ்வாதாரம் பறிபோகிறது என்று தான் நாமெல்லாம் பேசி திரிகிறோம். ஆனால் நம் இளைய தலைமுறையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான இளைஞர்கள்  இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று. இத்தகைய இந்தியாவின் ஆணி வேரையே அசைத்து பார்க்க ஆரம்பித்து விட்டது மது என்னும் அரக்கன்.
மது போதையில் மயங்கிக் கிடக்கும் அரசின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது யார்?
அரசின் போதை தெளிவது எப்போது?
மதுவுக்கு எதிராக எத்தனை போரட்டங்களை முன்னெடுத்தாலும் நீங்கள் ஓடுக்கப்படுவீர்கள். ஏனென்றால் உங்களை விட மதுதான் அரசுக்கு தேவையாக இருக்கிறது.
போராடாமலே மது அரக்கனை அழிப்பதற்கான ஆயுதம் நம்மிடையே இருக்கிறது. நாம் தான் அந்த ஆயுதத்தை பிரயோகிக்காமலே   ஆயிரத்திற்கும்  ஐநூற்றிற்கும் அடகு வைத்து விடுகிறோம்
“ஐந்து ஆண்டுகளுக்கு”