சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Thursday, January 21, 2016

இறந்து போனவனின் கடைசி கடிதம்


வாழ்ந்து  கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம் .

இந்த கடிதத்தை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது நான் உங்களுடன் இருக்கபோவதில்லை

என் மூச்சுக்காற்றை நுரையீரலை விட்டு வெளியேற விடாமல் கழுத்தோடு ஒரு முடுச்சை போட்டு தடுத்து நிறுத்த போகிறேன்.
என் மரணத்திற்கு நியாயம் கேட்டு கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தலாம்.

இந்த கடிதத்தின் எந்த ஓர் இடத்திலும் நான் என் ஜாதியை குறிப்பிட போவதில்லை. ஆனாலும் நான் அம்பேத்காரை பின்பற்றுகிறவன் என்ற காரணத்தினாலே நீங்கள் எல்லோரும் என்னை தலித் என்று அடையாளம் கண்டு அழைப்பீர்கள்.

ரோஹித், ஆராய்ச்சி மாணவர், முனைவர் பட்ட மாணவர் என்றெல்லாம் அழைத்தாலும் அவற்றுக்கு பின்னால் தலித் என்ற சொல்லை சேர்த்துக்கொள்வீர்கள்.

தலித் மாணவர் தற்கொலை,தலித் மாணவருக்கு நீதி வழங்கிடு தலித் மாணவரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய் என்று எழுதிய பலகைகளை கையிலேந்தி போராடுவீர்கள்

தலித் மாணவனை கொன்றது எது? என்று விவாதம் நடத்துவீர்கள். அந்த விவாதத்தில் தண்ணீர் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் என்னை தலித் மாணவன் தலித் மாணவன் என்றே சொல்லி தீர்ப்பீர்கள்

என்னை ஒரு ஆராய்ச்சி மாணவனாகவோ எழுத்தாளனாகவோ மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு இவன் ஒரு தலித் என்பதை சுட்டிகாட்டுவீர்கள்

இதே நிலை ஒரு ஆதிக்க சாதி மாணவனுக்கு ஏற்பட்டிருந்தால் அவனை ஒரு ஆராய்ச்சி மாணவனாக மட்டுமே அடையாளபடுத்தி இருப்பீர்கள்

இந்திய குடியரசிற்கு பாடுபட்டவர்களையெல்லாம் தேச தலைவர்கள் என்பீர்கள். அதை அமைத்துகொடுத்த அம்பேத்காரை மட்டும் தாழ்த்தபட்டவர்களின் குறியீடு என்பீர்கள். அவரை பின்பற்றுபவர்களை தலித் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வீர்கள்

பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைகழகத்தில் நான் சொல்ல கூசிய அந்த வார்த்தையை, எப்போதெல்லாம் நான் தலையை  உயர்த்தினேனோ அப்போதெல்லாம் எழுந்திருக்கவே முடியாதபடி என்னை அழுந்தி தள்ளிய அந்த வார்த்தையை, மற்றவர்களின் மூலைகளிலெல்லாம் அறிவுச்சுடர் ஒளிவிடுகிறது என்றும் எங்களின் மூலைகளில் மட்டும் இட ஒதுக்கீடு மட்டுமே உள்ளது என்று நம்பச்செய்த தலித் என்ற அந்த வார்த்தையை அனாயாசமாகப் பயன்படுத்துவீர்கள்.

அதிகார மையம் எந்த வார்த்தையை வைத்து அவ்வளவு எளிதாக என்னை மரணத்தை நோக்கி தள்ளியதோ அதே வார்த்தையை வைத்தே என் மரணத்திற்கு நீங்கள் நியாயம் கேட்பீர்கள்

அவர்கள் என்னை தலித் என்பதற்காக ஒரு முறை கொன்றார்கள்.
நீங்கள் அதே வார்த்தையை சொல்லி உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னை கழுவேற்றுவீர்கள்
-\¼ªVë       21.01.16…..   5:20 am